search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி தோழர்கள்"

    25 வருட நட்புக்கு இலக்கணமாக வறுமையில் வாடும் பள்ளி தோழர்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உதவி வருகின்றனர்.
    மாணவர் பருவ நட்பு என்பது ரெயில் பெட்டி நட்பை போன்றது தான். ரெயில் பயணத்தின் போது நட்பாக பழகினாலும் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி அவரவர் பாதையில் சென்று விடுவர்கள்.

    கிட்டத்தட்ட பள்ளிக்கூட நட்பும் அதே மாதிரித்தான். பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக படிப்பார்கள். படிப்பு முடிந்ததும் வேலை, குடும்பம் என்று ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை பாதையில் பயணிப்பார்கள்.

    ‘எப்போதாவது’ யாரையாவது சந்தித்தால் ஹாய் நண்பா எப்படி இருக்கே? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? என்ற விசாரிப்போடு முடித்துக்கொள்வது தான் வழக்கம்.

    ஆனால் ஆவடி காமராஜ்நகர் நாசரத் மேல்நிலைப்பள்ளியில் 1993-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளியேறியவர்கள் வித்தியாசமானவர்கள்.

    பள்ளிப்படிப்பை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் 200 மாணவ-மாணவிகள் ஒன்றாக படித்தவர்கள். இப்போது எங்கெங்கோ... என்னென்ன வேலைகளிலோ... மனைவி குழந்தைகளுடன் இருப்பார்கள், உண்மை தான்.

    சென்னையில் வசிப்பவர்களில் ஒரு சிலர் மட்டும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அப்போது கார்த்திக் என்ற சக பள்ளித்தோழர் ஒருவர் திடீரென்று மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு 2 குழந்தைகள். சரியான வேலை எதுவும் இல்லாததால் அந்த குடும்பம் தடுமாறியது. பள்ளி தோழனின் மனைவி- குழந்தைகள் கஷ்டப்படுகிறார்களே அவர்களுக்கு எப்படி உதவுவது என்று அவருக்கு புரியவில்லை.

    அப்போது தான் அவருக்குள் ஒரு ஐடியா உதித்தது. உடன் படித்த தோழர்களை ஒன்று திரட்ட தொடங்கினார்கள். 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஒரு நண்பர் அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். சிலர் வியாபாரம் செய்து செல்வ செழிப்புடன் இருக்கிறார்கள். சிலர் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.

    அனைவரும் அவர்கள் படித்த பள்ளியிலேயே ஒன்று கூடினார்கள். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதோடு நின்றுவிடவில்லை.

    அவர்களோடு படித்தவர்களில் யார்? யார்? வறுமையில் இருக்கிறார்கள்? குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் சிரமப்பகிறார்கள்? என்பதை தேடிப்பிடித்தார்கள்.

    அந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவ தொடங்கினார்கள். இந்த நிலையில் இறந்துபோன பள்ளித்தோழனின் மகளுக்கு ‘டெங்கு’ காய்ச்சல் வந்தது. அந்த குழந்தையை காப்பாற்ற எல்லோரும் பண உதவி செய்து உயர் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

    அதன்பிறகு பள்ளித் தோழர்களுக்கு உதவுவதற்கு ‘கிளாப்ஸ்’ என்ற அறக்கட்டளையை தொடங்கினார்கள். அதில் ஒவ்வொருவரும் நன்கொடை கொடுத்து அறக்கட்டளையிலும் சில லட்சங்கள் நிதி சேர்ந்துள்ளது. அந்த அறக்கட்டளை மூலம் நலிவுற்ற தோழர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவை வழங்கி வருகிறார்கள்.

    இறந்துபோன கார்த்திக்கின் மகனை அவர்கள் படித்த நாசரத் பள்ளியிலேயே படிக்க வைக்கிறார்கள். முன்னாள் மாணவர்கள் சேர்ந்து செய்யும் இந்த மனிதநேய உதவியை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சலுகையும் வழங்கி வருகிறது.

    ஒன்றாய் கூடி மகிழ்ந்திருந்தவர்களிடம் பொறுப்பாளர்கள் பெயர் விவரம் கேட்டபோது நாங்கள் எல்லோருமே பொறுப்பாளர்கள் தான். எங்களுக்குள் ஒரிருவர் பெயரை மட்டும் முன்னிலைப்படுத்தி இனியும் ஒரு பிரிவு எங்களுக்குள் வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள்.

    இது தான் உண்மையான நட்பு.

    முகஸ்துதிக்காக நட்பு பாராட்டுபவர்கள் மத்தியில் மனப்பூர்வமாக நட்பு பாராட்டி வாழும் இவர்கள் நட்புக்கு இலக்கணமானவர்கள்.
    ×